திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணியசுவாமி திருக்கோவில்

தல வரலாறு

        வீரமஹேந்திரபூரி என்ற நகரத்தை சூரபத்மன் என்ற அரக்கன் ஆண்டு வந்தான். அதிக தெய்வபக்தியுள்ள சூரபத்மனுக்கு, பெருமாள் திவ்ய சக்தியை வரமாக கொடுத்து அருள் புரிந்தார். இந்த சக்தியின் உதவியால் சூரபத்மன் மூன்று லோகத்தையும் ஆண்டு வந்தான். இதனால் அவனுடைய ஆணவம் அதிகரித்து மக்களை துன்புறுத்தத் தொடங்கினான். சூரபத்மன் அராஜகமான செயலைத் செய்யத் தொடங்கினான். இந்த அழிவுச்செயல்களை அழித்திட சுப்ரமணியர் தனது படை பரிவாரங்களுடன் சூரபத்மனுடன் போருக்குச் சென்றார். முதலில், சுப்ரமணியர் சூரபத்மனின் இளைய சகோதரனையும், மற்ற அரக்கர்களையும் அழித்தார். கடைசியில் சூரபத்மனுடன் போர் செய்தார். அவன் , பல வேடங்களில் தோன்றி சுப்ரமணியருக்கு விளையாட்டு காட்டினான். சூரபத்மன் சுப்ரமணியருடன் போர் செய்ய வரும் முதல் நிகழ்வை அருளுக்கும் இருளுக்கும், கருணைக்கும் கொடுமைக்கும், அறிவுக்கும் மருளுக்கும் நடக்கும் சந்திப்பு என்று கந்தபுராணம் சொல்கிறது. சூரபத்மனின் ஒரு பாதி "நான்" எனும் அகங்காரம், மறுபாதி "எனது" எனும் மமகாரம். இந்த இரண்டையும் கொண்ட சூரபத்மன் மாமரமாக மாறி கடலுக்கடியில் தலைகீழாக நின்ற போதுதான் சுப்ரமணியரின் வேல் அம்மரத்தை இரண்டு பகுதியாகப் பிளந்தது. அந்த இரண்டு பாகங்களுக்குள் ஒன்று ஆண்மயிலாகவும், இன்னொன்று சேவலாகவும் தோன்றின. சுப்ரமணியர் ஆண்மயிலை வாகனமாகவும், சேவலைக் கொடியாகவும் வைத்துக் கொண்டார் என்றும் கந்த புராணம் சொல்கிறது. இந்த சூரசம்ஹாரம் நடைபெற்ற இடம்தான் திருச்செந்தூர் என்று புராணங்கள் தெரிவிக்கின்றது.

கோவில் அமைப்பு

        இங்கு கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கடலில் நீராடிவிட்டு வருவது வழக்கமாகும். அதன் பிறகு பக்தர்கள் அருகிலுள்ள நாழிக்கிணற்றுத் தண்ணீரிலும் நீராடுகிறார்கள். கடலோரத்தில் இருக்கும் இந்தக் கிணற்றுத் தண்ணீர் மட்டும் உப்பு சுவையில்லாமல் குடிப்பதற்கேற்ற சுவையான நீராக இருப்பது இங்குள்ள அதிசயமாகும். கடலில் குளித்து விட்டு இந்த நாழிக்கிணற்றில் குளித்தால் தீராத வியாதியும் குணமடையும் என்று இங்கு வரும் பக்தர்கள் நம்புகிறார்கள். ஏழு அடி ஆழமுடைய இந்த நாழிக் கிணற்றில் எப்போதும் தண்ணீர் ஊறிக் கொண்டே இருக்கிறது.சூரபத்மனோடு போரிட சுப்ரமணியரோடு வந்த படைவீரர்கள் தாகம் தணிப்பதற்காக அவர் கடலோரத்தில் இந்தக் கிணற்றைத் தோற்றுவித்ததால்தான் இந்தத் தண்ணீர் சுவையாகவும் நோய் தீர்க்கும் மருந்தாகவும் இருக்கிறது என்று வரலாறு சொல்கிறது. பக்தர்கள் இந்தக் கிணற்றை " ஸ்கந்த புஷ்கரணி" என்று அழைக்கிறார்கள்.

        திருச்செந்தூர் கோயிலுக்குள்ளே நுழைந்தவுடன் தூண்டுகை விநாயகர் சன்னதியைப் பார்க்கலாம். அடுத்து அழகிய கலைச்சிற்பங்களைக் கொண்ட ஷண்முக மண்டபம் இந்தக் கோயிலுக்கு தனிச்சிறப்பைக் கொடுக்கிறது. இந்த மண்டபம் 120 அடி நீளத்தையும் 86அடி அகலத்தையும் கொண்டது. தொலைவிலிருந்து வரும் பக்தர்கள், 124 தூண்களைக் கொண்ட இந்த மண்டபத்தில் தங்கி விட்டுச் செல்கிறார்கள். தீராத வியாதி குணமடைய பல கோடி பக்தர்கள் திருச்செந்தூரை நம்பி நாடி வருகிறார்கள். இந்த மண்டபத்திற்கு அடுத்து இடும்பன் சன்னதியைப் பார்க்கலாம். ( அகஸ்திய முனிவரின் சிஷ்யனான இடும்பன் சுப்ரமணியரோடு கடுமையாக போர் செய்து தோற்று உயிர் நீத்தான். அதன் பிறகு அவருடைய அபார சக்தியை அறிந்து கொண்ட இடும்பன் சுப்ரமணியரை மனமுருகி பிரார்த்தனை செய்தான். இடும்பனின் பிரார்த்தனையை மெச்சிய சுப்ரமணியர் ஆறுபடை வீடுகளிலும் தன்னுடைய சன்னதிக்கு முன்னால் இடும்பனின் சன்னதி இடம்பெற வேண்டுமென்றும், தன்னை நாடி வரும் பக்தர்கள் முதலில் இடும்பனை தரிசிக்க வேண்டுமென்றும் வரத்தைக் கொடுத்தார்.)

திருச்செந்தூர்அருள்மிகுசுப்ரமணியசுவாமிகோயில்

    கோயிலின் பிரதான சன்னதியில் சுப்ரமணியர், பிரம்மச்சாரியாக நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். நான்கு புஜங்களுடன் நின்ற கோலத்தில் காட்சி கொடுக்கும் சுப்ரமணியரின் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. இடப்புறத்திலுள்ள ஒருகை இடுப்பிலும், மற்றொரு கையில் ஜபமாலையும், வலப்புறத்திலுள்ள ஒருகையில் வேலும், இன்னொரு கையில் புஷ்பமும் கொண்டு சுப்ரமணியர் காட்சி தருகிறார். இந்த சன்னதிக்கு அடுத்து இடது புறத்தில் சின்ன வாசலைக் கொண்ட துவாரபாலகா வீரமஹேந்திர சன்னதி இருக்கிறது. இந்தச் சன்னதியில் சற்று குனிந்து பார்த்தால் ஐந்து லிங்கங்களைக் காணலாம். இங்கு வரும் பக்தர்கள் தங்களுடைய பாவங்களை அழிக்கும் சக்தியைக் கொண்ட இந்த ஐந்து லிங்கங்களை வணங்கிச் செல்கிறார்கள். இந்த ஐந்து லிங்கங்களும் ஆகாயம், பூமி, தண்ணீர், காற்று, அக்னி ஆகிய ஐந்து சக்திகளைக் குறிக்கிறது. ஆறு முகங்கள், பன்னிரெண்டு கரங்களோடு இருபுறங்களிலும் ஸ்ரீவள்ளி, ஸ்ரீதேவயானையுடன் காட்சி தரும் ஷண்முகநாதரின் சன்னதியும் இத்திருத்தலத்தில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. சண்முகநாதரின் பின்புறத்தில் இடம் பெற்றுள்ள ஜகன்நாதர் லிங்கம் சூரியனையும், இடப்புறத்திலுள்ள ஜயந்திநாதர் லிங்கம் சந்திரனையும், வலப்புறத்தில் இடம்பெற்றுள்ள லிங்கம் ஆத்மாவைக் குறிப்பது இந்தக் கோயிலின் சிறப்பு அம்சமாகும். இந்த எட்டு லிங்கங்களை தரிசனம் செய்தவர்கள் எட்டு திக்குகளின் அபூர்வ சக்திகளைக் கொண்ட சிவபெருமானை தரிசனம் செய்ததற்கு சமமாகக் கருதப்படுகிறது.
أحدث أقدم